Thursday, April 10, 2014

பொருளியல்: பிளஸ் டூ மாணவர்களுக்கு சக்ஸஸ் டிப்ஸ்


பொருளியல்: பிளஸ் டூ மாணவர்களுக்கு சக்ஸஸ் டிப்ஸ்

பிளஸ் டூ  பொருளியல் பாடப் புத்தகத்தில் மொத்தம் 12 பாடங்கள் உள்ளன. அனைத்துப் பாடங்களும் எளிமையான பாடங்களே. இதில் பாடம் - 4  (தேவையும் அளிப்பும்),  பாடம் - 7 (செலவும், வருவாயும்), பாடம் - 8 (அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்) ஆகிய மூன்று பாடங்களை முழுவதுமாகப் படித்தாலே (28+30+34) 92 மதிப்பெண்களை எளிதாகப் பெற்று தேர்ச்சி பெற்றுவிடலாம். மேலும் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்ற நோக்கில் உள்ளவர்கள் அனைத்துப் பாடப்பகுதியின் பின்புறமுள்ள பயிற்சி வினாக்களை முழுவதும் தொகுத்துப் படித்தால் குறைந்தது 180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுவிட முடியும்.

பிளஸ் டூ பொருளியல் வினாத்தாள் நான்கு பிரிவுகளைக் கொண்டது. பிரிவு - A, ஒரு மதிப்பெண் வினாக்கள் அடங்கியது. பிரிவு - B, 3 மதிப்பெண் வினாக்கள் கொண்டது. பிரிவு - C, 10 மதிப்பெண்கள் வினாக்கள் கொண்டது. பிரிவு - D, 20 மதிப்பெண்கள் வினாக்கள் கொண்டதாகும். மாணவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் 200-க்கு 200 மதிப்பெண்களை சுலபமாகப் பெற்றுவிட முடியும். அதற்கு பாடப்பகுதியில் கேட்கப்படும் முக்கிய வினாக்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்

பிரிவு - A (50 மதிப்பெண்கள்): இப்பிரிவில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 50 கேட்கப்படும். இந்த வினாக்கள் பாடப்புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள பயிற்சி வினாக்களிலிருந்தே பொதுவாக கேட்கப்படுகிறது. ஆகையால் பொருளியல் பாடத்தில் உள்ள 12 பாடப் பகுதிகளின் (12 x 20 = 240 வினாக்கள்), ஒரு மதிப்பெண் வினாக்களைத் தொகுத்து பயிற்சி பெறுவதன் மூலம் மாணவர்கள்  50 மதிப்பெண்களை முழுவதுமாகப் பெற்றிட முடியும். மேலும் 200 மதிப்பெண்கள் என்ற கனவு 25 சதவிகிதம் உறுதி செய்யப்படும்.

பிரிவு  B (30 மதிப்பெண்கள்): இப்பிரிவில் 10 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். வினாவுக்கு 3 மதிப்பெண்கள் வீதம் 30 மதிப்பெண்கள் வழங்கப்படும்இப்பகுதியில் முழு மதிப்பெண்கள் பெற்றிட, பாடம் - 2 (அடிப்படைப் பொருளியல் பிரச்சினைகள்), பாடம் - 5 (சமநிலை விலை), பாடம் - 6 (உற்பத்தி), பாடம் - 7 (செலவும் வருவாயும்) போன்ற பாடப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து பாடப்பகுதியின் பின்புறமுள்ள அனைத்து சிறு வினாக்களையும் தொகுத்துப் படித்து வந்தாலே, 8 வினாக்களுக்கு சிறப்பாக விடையளித்துவிட முடியும். மீதமுள்ள 2 வினாக்களுக்கு, பாடம் - 10 (வருமான நிர்ணயம் எளிய கோட்பாடு) மற்றும் பாடம் - 12 (நிதியியல் கொள்கை) போன்ற பாடங்களின் பின்பகுதியில் உள்ள அனைத்து வினாக்களையும் முழுவதுமாக தொகுத்துப் படிப்பதன் மூலம் 10 வினாக்களுக்கும் சிறப்பாக விடையளித்து முழு மதிப்பெண்களையும் பெற முடியும். இதனால், 200 மதிப்பெண்கள் என்ற கனவு 50 சதவீதம் உறுதி செய்யப்படும்

பிரிவு – C (60 மதிப்பெண்கள்): இப்பகுதியில் 6 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 10 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 60 மதிப்பெண்கள் வழங்கப்படும்இப்பிரிவில் முழு மதிப்பெண்களைப் பெற விரும்பும் மாணவர்கள், பாடம் - 7 (செலவும் வருவாயும்),  பாடம் - 10 (வருமான நிர்ணயம் எளிய கோட்பாடு), பாடம் - 12 (நிதியியல் கொள்கை) ஆகிய மூன்று பாடங்களையும் தேர்வு செய்து பாடத்தின் பின்பகுதியிலுள்ள அனைத்து வினாக்களையும் தொகுத்துப் படிப்பதன் மூலம் 6 வினாக்களுக்கு சிறப்பாக விடையளித்து விட முடியும். மேற்கண்ட பாடங்களில் ஒரு பாடத்துக்கு 2 வினாக்கள் வீதம் 3 பாடத்திற்கு 6 வினாக்கள் கேட்கப்படுவதால் 60 மதிப்பெண்களை முழுமையாகப் பெற்று விடமுடியும்.

பிரிவு - D (60 மதிப்பெண்கள்): இப்பிரிவில் மொத்தம் 3 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 20 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 60 மதிப்பெண்கள் வழங்கப்படும்பாடம் - 3 (நுகர்வோர் செயல்பாட்டின் கோட்பாடு), பாடம் - 4 (தேவையும் அளிப்பும்), பாடம் - 8 (அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்) ஆகிய பாடங்கள் எளிமையான பாடப் பகுதிகளாகும். இப்பாடப் பகுதிகளில்  வரைபடங்கள், அட்டவணைகள், கோட்பாடுகள் எளிமையாக உள்ளதாலும் அதற்கென்று மதிப்பெண்கள் வழங்கப்படுவதாலும் மாணவர்கள் இப்பாடப் பகுதிகளில் தனி கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். இப்பாடப் பகுதிகளின் பின்புறமுள்ள அனைத்து வினாக்களையும் தொகுத்துப் படித்தால் மூன்று வினாக்களுக்கும் சிறப்பாக விடையளித்து 60 மதிப்பெண்களையும் முழுவதுமாக பெற்று 200 மதிப்பெண்கள் என்ற கனவை 100 சதவீதம் உறுதி செய்யலாம். குறிப்பாகபாடம்  4-இல்  (தேவையும் அளிப்பும்) உள்ள கட்டுரை வினாக்களான தேவை விதி, விலைத் தேவை நெகிழ்சியினை அளவிடும் முறைகள் ஆகிய இரண்டு வினாக்களைப் படித்தால் மட்டும் இப்பிரிவிற்குரிய மூன்று வினாக்களில் ஒரு வினாவிற்கு விடையளித்து 20 மதிப்பெண்களை முழுவதுமாகப் பெறலாம்

நேர மேலாண்மை
பொதுவாக பொதுத் தேர்வில் பொருளாதாரப் பாடப் பகுதியில் விடையளிக்கும்போது நேரப் பற்றாக்குறை என்பது வழக்கமான ஒன்று. மொத்த மதிப்பெண்கள் 200, ஆனால் காலம் 3 மணிநேரம் மட்டும்தான்.

இதில் பிரிவு A-வுக்கு  20 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். இதில் சரியான விடை கண்டுபிடித்து எழுதும் கேள்விகளுக்கு 5 நிமிடங்களும், கோடிட்ட இடங்களை நிரப்ப வேண்டிய கேள்விகளுக்கு 5 நிமிடங்களும், பொருத்துக பகுதிக்கு 5 நிமிடங்களும், ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்க வேண்டிய வினாக்களுக்கு 5 நிமிடங்களும் என 20 நிமிடங்களை ஒதுக்கவேண்டும்.  

பிரிவு B-வுக்கு 30 நிமிடங்களை ஒதுக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 3 நிமிடங்கள் வீதம் 10 கேள்விகளுக்கு 30 நிமிடங்களை ஒதுக்கலாம்.   பிரிவு C-ல் 6 வினாக்களுக்கு 10 நிமிடங்கள் வீதம் 60 நிமிடங்களை ஒதுக்கவேண்டும். பகுதி  D-ல் 3 வினாக்களுக்கு 20 நிமிடங்கள் வீதம் 60 நிமிடங்களை ஒதுக்கவேண்டும்.

இவ்வாறு நான்கு பிரிவுகளுக்கும் சேர்த்து 20+30+60+60 என மொத்தம் 170 நிமிடங்களை ஒதுக்கவேண்டும். மீதமுள்ள 10 நிமிடங்களை திருப்புதல் செய்தல், அடிக்கோடிடுதல், வினா எண், விடைகளைச் சரிபார்த்தல், விடைத்தாள்களை முறைப்படுத்திக் கட்டுதல் போன்ற பணிகளுக்குச் செலவிடலாம்.

தேர்வுக்கு முன் செய்யவேண்டிய முக்கியக் குறிப்புகள்:
விதிகள், கோட்பாடுகள், திறனாய்வுகள், சமன்பாடுகள் ஆகியவற்றை குறிப்பேட்டில் எழுதிவைத்து, மனதில் பதிய வையுங்கள். வரைபடங்கள், அட்டவணைகளை வரைந்து பழகிப் பார்த்தல் அவசியம்.

வெற்றி என்பது கடினமான விஷயமல்ல. வெற்றி பெற வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது குறித்து தெளிவாக அறிந்திருக்க வேண்டும். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதன் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஆல் பெஸ்ட்!


No comments:

Post a Comment