Thursday, December 24, 2015

தேர்வை எப்படி எழுத வேண்டும்?

எல்லாப் பாடங்களுக்குரிய தேர்விலும், அதிக மதிப்பெண் வினாக்கள், சற்றே குறைந்த மதிப்பெண் வினாக்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் வினாக்கள் என்ற வகைப்பாடு இருக்கும்.
எனவே, மாணவர்கள் முதலில் அதிக மதிப்பெண் வினாக்களை எழுதினால் நன்று. ஏனெனில், முதலிலேயே குறைந்த மதிப்பெண் வினாக்களுக்கு விடை எழுதும்போது, ஆர்வம் மற்றும் உற்சாகம் மிகுதியால், தேவைப்படும் அளவைவிட, அதிகமாக எழுதிக்கொண்டே செல்வோம். இதனால், பயனில்லை என்பதோடு, மிகப்பெரிய மதிப்பு வாய்ந்த நேரமானது, தேவையின்றி வீணாகிறது.
இதனால், நிறைய எழுத வேண்டிய அதிக மதிப்பெண் வினாக்களுக்கு, தேவையான அளவு எழுத முடியாமல் திணறி, மதிப்பெண்களையும் இழக்க நேரிடுகிறது.
பதில் எழுதும்போது, கேள்விக்கான பிரிவை குறிப்பிடுவதற்கும், கேள்வி எண்ணைக் குறிப்பிடுவதற்கும், எந்த வகையிலும் மறத்தல்கூடாது. அப்படி மறந்தால், கோட்டைவிடப்போவது நீங்கள்தான்.
தேர்வு மையத்தில், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அடிக்கப்படும் மணியை எதிர்பார்ப்பதற்கு பதில், நம் கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு, அதன்மூலம் நேரத்தைப் பார்த்துக்கொண்டு எழுதலாம். தேர்வு எழுதும் முன்பாகவே, இந்த கேள்விப் பிரிவை, இவ்வளவு நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு, அதற்கேற்ப செயல்படவும்.
கடைசி மணியடிக்கும் வரை, எழுதுவது நல்லதல்ல. குறைந்தபட்சம் 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே முடித்துவிட்டு, கேள்வி எண்கள் மற்றும் பிரிவுகள், சரியானபடி குறிப்பிடப்பட்டுள்ளதா, பதில்களின் இடையில், சரியான முறையில் கோடுகள் போடப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்கவும்.

Thursday, February 19, 2015

தேர்வு காலங்கள்.. மாணவனே பதட்டம் தவிர்... மனதை லேசாக்கு!
பிளஸ் 2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பாடம் அல்லாத பிற விஷயங்களில் வழிகாட்டவே இந்த பகுதி.
"தேர்வுகளை எவ்வாறு திட்டமிட்டு எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்" என மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் துரைபாஸ்கரன் தரும் 'டிப்ஸ்'கள் இங்கே...
முதலில் பதட்டப்படுவதை தவிர்க்க வேண்டும். உடல், மன நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தேர்வு காலம் முடியும் வரை மனதை லேசாக வைத்திருக்க பழக வேண்டும்.
எந்த பாடத்தை படித்தாலும் அதற்குமுன் ஐந்து நிமிடங்கள் தியானம் செய்து மனதை ஒருநிலைப்படுத்திய பின் படிக்கலாம். தூக்கம் பாதிக்கும் வகையில் அதிக நேரம் கண் விழிக்க கூடாது. தேர்வு முடியும் வரை வீண் விவாதங்கள், அரட்டைகளை தவிர்க்க வேண்டும். வீடுகளில் 'டிவி' கேபிள் இணைப்பை தேர்வு வரை 'கட்' செய்வது சிறந்தது. நேரத்தை கபளீகரம் செய்யும் மொபைல் போன், கம்ப்யூட்டர் கேம்ஸ்கள் பக்கம் தலைவைத்து படுக்கக்கூடாது. டூவீலர் ஓட்டும் ஆசையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.'தியரி' கேள்விகளை அதிகாலை, மாலையில் படிப்பது நல்லது. கணக்கு பாடத்தை இரவில் செய்து பார்க்கலாம். அறிவியலில் படம் வரையும் கேள்விகளுக்குரிய படங்களை அடிக்கடி வரைந்து பார்த்தால் முழுமதிப்பெண் பெற வழியுள்ளது.கடின பகுதிகளை அடிக்கடி எழுதி பார்ப்பது, குறிப்புகள் எடுத்து படிக்கும் பழக்கத்தால் பாடங்கள் மனதில் நிற்கும். பாடங்களை படிக்கும்போது தூய்மையான காற்றோட்டம் உள்ள இடங்களில் அமர்ந்து படித்தால் சோர்வு ஏற்படாது.விரைவில் செரிமானமாகும் அளவான சாப்பாடு மாணவர்களுக்கு அவசியம். பசி உணர்வுடன் படிப்பதை தவிர்க்க வேண்டும். பாடத்தின் முக்கிய பகுதிகளை நண்பர்களுடன் அடிக்கடி விவாதிக்கலாம்.விரும்பிப் படிக்கும் எந்த பாடங்களும் கடினமில்லை. விடா முயற்சியும், பயிற்சியும் இருந்தால் அதிக மதிப்பெண் பெற்று சாதிக்கலாம்.
வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: தேர்வுத்துறை
பரமக்குடி: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 5ல் துவங்குகின்றன. விடைத்தாள்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது. விடைத்தாள் பயன்படுத்தும் முறை குறித்து, மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
அதன் விவரம்
விடைத்தாளின் முகப்புத்தாளில் மாணவரின் கையெழுத்து மட்டுமே இட வேண்டும். மற்ற எந்த தாள்களிலும் குறியீடு, பெயர், தேர்வு எண் எழுதக் கூடாது.
வினா எண்களை தவறாமல் எழுத வேண்டும். நீலம், கருப்பு மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கலர் ஸ்கெட்ச், பென்சிலை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பக்கத்திலும் 20 முதல் 25 வரிகள் எழுத வேண்டும். வினாத்தாளை சேதப்படுத்துவது, கிழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
தேர்வு குறித்த மனப்பதட்டத்தை தவிர்க்க...
தேர்வு குறித்த மனப்பதட்டம் இரவு துாக்கத்தை கெடுத்துவிடும். எனவே நேர்மறையான நல்ல விஷயங்களை நினைத்துப் பார்த்து உற்சாக மனநிலையுடன் படிக்க துவங்க வேண்டும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த மனநல டாக்டர் விக்ரம் ராமசுப்ரமணியன்.
மற்றவர்களுடன் தன்னைத் தானே ஒப்பிட்டு பார்த்து பயப்படக்கூடாது. இதுதான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் என்ற மனஉணர்வு, ஆசிரியர், பெற்றோரின் எதிர்பார்ப்பு... என கலவையான மனநிலையில் மாணவர்கள் இருப்பர். இதுதான் தேர்வு குறித்த மனப்பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
முதல் மதிப்பெண் பெறும் மாணவர் முதல் சராசரி மாணவர் வரை இந்த மனநிலையை மாற்ற முடியாது. அதை கடந்து வரவேண்டும். நான் நன்றாக படிப்பேனா... நான் நல்ல மதிப்பெண் பெறுவேனா... என்ற எதிர்மறை சிந்தனையை மாற்றுங்கள்.
நான் நன்றாக தேர்வெழுதுவேன். நல்ல மதிப்பெண் பெறுவேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள். இந்த நேர்மறை சிந்தனை மனப்பதட்டத்தை குறைக்க உதவும்.
ஆழ்ந்த மூச்செடுப்பது இன்னொரு சிறந்த வழி. மூச்சை நன்றாக இழுத்து நிதானமாக வெளியேற்றும்போதும் மனப்பதட்டம் குறையும். கவனம் குவிந்து ஞாபகசக்தி கூடும்.
தேர்வறையில் சகமாணவர்களின் பதட்டத்தை பார்த்து தனக்கு தானே பயம் ஏற்படும். நான் நன்றாக தேர்வெழுதுவேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். பதட்டப்படும் மாணவர்களுக்கும் தைரியம் சொல்லுங்கள்.
பெற்றோர் உதவ வேண்டும்
அதிக மனப்பதட்டத்தில் இருந்தால் இரவு துாக்கம் வராது. எப்போதும் தேர்வை பற்றியே சிந்தனை இருக்கும். யோசிக்காதே என்று சொன்னால் தேர்வை மறந்து விடு என்று சொல்வதற்கு சமமாகிவிடும். இரவு துாக்கம் அவசியம் என்பதால் பெற்றோர் தான் இதற்கு உதவ வேண்டும்.
பாடங்கள், தேர்வு தவிர, பிள்ளைகளை சந்தோஷப்படுத்தும் விஷயங்களை நினைவுபடுத்த வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை எடுத்துச் சொல்லுங்கள். நகைச்சுவையாக பேசலாம். உற்சாகமான மனநிலையில் துாங்குவதன் மூலம் நன்றாக தேர்வெழுதலாம்.

Saturday, January 10, 2015

தேர்வில் சாதிப்பது எப்படி?
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருப்பீர்கள்.
எப்படி படித்தால் தேர்வில் சாதிக்கலாம்?
* படிப்பது மட்டுமே நமது வேலை. மற்றவர்களை போட்டியாக நினைக்கக்கூடாது.
* திருப்புதல் தேர்வுகளின் போது, சரியாகப் படித்தால் நிறைய மதிப்பெண் எடுக்க முடியும்.
* தேர்வுக்கு இறுதி மூன்று மாதங்கள் கூடுதல் கவனமுடன், சின்னச் சின்ன திட்டமிடல்களுடன் படிக்க வேண்டும்.
* முதன்மைப் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
* திட்டமிட்டு படித்தலே வெற்றிக்கு அடிப்படை.
* வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
* தியானப் பயிற்சி செய்வதால் 'டென்ஷன்' குறையும்; ஞாபக சக்தி அதிகரிக்கும்.
* முந்தைய ஆண்டு வினாத்தாள்களுக்கு விடையளித்தும், வரைபடங்களை வரைந்தும் பயிற்சி எடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு நாளும், வகுப்பறையில் நடத்தும் பாடங்களை திட்டமிட்டு படித்து வீட்டிற்கு வந்ததும் எழுதிப்பார்ப்பது சிறந்தது.
* பிழைகள் இல்லாமல், தெளிவாகவும்; அர்த்தம் மாறாமலும் தேர்வு எழுதப் பழக வேண்டும்.
* மறுநாள் படிக்கலாம் என நினைக்காமல் தினமும் படிக்கவேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் வீட்டில் சுயமாக தேர்வு எழுதி பயிற்சி
பெறவேண்டும்.
* இரவு துாக்கம் வரும்வரை படிக்கலாம். 'டிவி' பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
* காய்கறி, பழங்கள் உண்பது மனதையும், உடலையும் புத்துணர்வுடன் வைக்கும்.
* லட்சியத்துடன் படித்தால் தேர்வில் அனைவரும் சாதிக்கலாம்.