Thursday, February 19, 2015

தேர்வு காலங்கள்.. மாணவனே பதட்டம் தவிர்... மனதை லேசாக்கு!
பிளஸ் 2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பாடம் அல்லாத பிற விஷயங்களில் வழிகாட்டவே இந்த பகுதி.
"தேர்வுகளை எவ்வாறு திட்டமிட்டு எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்" என மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் துரைபாஸ்கரன் தரும் 'டிப்ஸ்'கள் இங்கே...
முதலில் பதட்டப்படுவதை தவிர்க்க வேண்டும். உடல், மன நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தேர்வு காலம் முடியும் வரை மனதை லேசாக வைத்திருக்க பழக வேண்டும்.
எந்த பாடத்தை படித்தாலும் அதற்குமுன் ஐந்து நிமிடங்கள் தியானம் செய்து மனதை ஒருநிலைப்படுத்திய பின் படிக்கலாம். தூக்கம் பாதிக்கும் வகையில் அதிக நேரம் கண் விழிக்க கூடாது. தேர்வு முடியும் வரை வீண் விவாதங்கள், அரட்டைகளை தவிர்க்க வேண்டும். வீடுகளில் 'டிவி' கேபிள் இணைப்பை தேர்வு வரை 'கட்' செய்வது சிறந்தது. நேரத்தை கபளீகரம் செய்யும் மொபைல் போன், கம்ப்யூட்டர் கேம்ஸ்கள் பக்கம் தலைவைத்து படுக்கக்கூடாது. டூவீலர் ஓட்டும் ஆசையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.'தியரி' கேள்விகளை அதிகாலை, மாலையில் படிப்பது நல்லது. கணக்கு பாடத்தை இரவில் செய்து பார்க்கலாம். அறிவியலில் படம் வரையும் கேள்விகளுக்குரிய படங்களை அடிக்கடி வரைந்து பார்த்தால் முழுமதிப்பெண் பெற வழியுள்ளது.கடின பகுதிகளை அடிக்கடி எழுதி பார்ப்பது, குறிப்புகள் எடுத்து படிக்கும் பழக்கத்தால் பாடங்கள் மனதில் நிற்கும். பாடங்களை படிக்கும்போது தூய்மையான காற்றோட்டம் உள்ள இடங்களில் அமர்ந்து படித்தால் சோர்வு ஏற்படாது.விரைவில் செரிமானமாகும் அளவான சாப்பாடு மாணவர்களுக்கு அவசியம். பசி உணர்வுடன் படிப்பதை தவிர்க்க வேண்டும். பாடத்தின் முக்கிய பகுதிகளை நண்பர்களுடன் அடிக்கடி விவாதிக்கலாம்.விரும்பிப் படிக்கும் எந்த பாடங்களும் கடினமில்லை. விடா முயற்சியும், பயிற்சியும் இருந்தால் அதிக மதிப்பெண் பெற்று சாதிக்கலாம்.
வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: தேர்வுத்துறை
பரமக்குடி: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 5ல் துவங்குகின்றன. விடைத்தாள்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது. விடைத்தாள் பயன்படுத்தும் முறை குறித்து, மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
அதன் விவரம்
விடைத்தாளின் முகப்புத்தாளில் மாணவரின் கையெழுத்து மட்டுமே இட வேண்டும். மற்ற எந்த தாள்களிலும் குறியீடு, பெயர், தேர்வு எண் எழுதக் கூடாது.
வினா எண்களை தவறாமல் எழுத வேண்டும். நீலம், கருப்பு மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கலர் ஸ்கெட்ச், பென்சிலை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பக்கத்திலும் 20 முதல் 25 வரிகள் எழுத வேண்டும். வினாத்தாளை சேதப்படுத்துவது, கிழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
தேர்வு குறித்த மனப்பதட்டத்தை தவிர்க்க...
தேர்வு குறித்த மனப்பதட்டம் இரவு துாக்கத்தை கெடுத்துவிடும். எனவே நேர்மறையான நல்ல விஷயங்களை நினைத்துப் பார்த்து உற்சாக மனநிலையுடன் படிக்க துவங்க வேண்டும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த மனநல டாக்டர் விக்ரம் ராமசுப்ரமணியன்.
மற்றவர்களுடன் தன்னைத் தானே ஒப்பிட்டு பார்த்து பயப்படக்கூடாது. இதுதான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் என்ற மனஉணர்வு, ஆசிரியர், பெற்றோரின் எதிர்பார்ப்பு... என கலவையான மனநிலையில் மாணவர்கள் இருப்பர். இதுதான் தேர்வு குறித்த மனப்பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
முதல் மதிப்பெண் பெறும் மாணவர் முதல் சராசரி மாணவர் வரை இந்த மனநிலையை மாற்ற முடியாது. அதை கடந்து வரவேண்டும். நான் நன்றாக படிப்பேனா... நான் நல்ல மதிப்பெண் பெறுவேனா... என்ற எதிர்மறை சிந்தனையை மாற்றுங்கள்.
நான் நன்றாக தேர்வெழுதுவேன். நல்ல மதிப்பெண் பெறுவேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள். இந்த நேர்மறை சிந்தனை மனப்பதட்டத்தை குறைக்க உதவும்.
ஆழ்ந்த மூச்செடுப்பது இன்னொரு சிறந்த வழி. மூச்சை நன்றாக இழுத்து நிதானமாக வெளியேற்றும்போதும் மனப்பதட்டம் குறையும். கவனம் குவிந்து ஞாபகசக்தி கூடும்.
தேர்வறையில் சகமாணவர்களின் பதட்டத்தை பார்த்து தனக்கு தானே பயம் ஏற்படும். நான் நன்றாக தேர்வெழுதுவேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். பதட்டப்படும் மாணவர்களுக்கும் தைரியம் சொல்லுங்கள்.
பெற்றோர் உதவ வேண்டும்
அதிக மனப்பதட்டத்தில் இருந்தால் இரவு துாக்கம் வராது. எப்போதும் தேர்வை பற்றியே சிந்தனை இருக்கும். யோசிக்காதே என்று சொன்னால் தேர்வை மறந்து விடு என்று சொல்வதற்கு சமமாகிவிடும். இரவு துாக்கம் அவசியம் என்பதால் பெற்றோர் தான் இதற்கு உதவ வேண்டும்.
பாடங்கள், தேர்வு தவிர, பிள்ளைகளை சந்தோஷப்படுத்தும் விஷயங்களை நினைவுபடுத்த வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை எடுத்துச் சொல்லுங்கள். நகைச்சுவையாக பேசலாம். உற்சாகமான மனநிலையில் துாங்குவதன் மூலம் நன்றாக தேர்வெழுதலாம்.