Wednesday, December 28, 2016

டாப் ஸ்கோர் எடுக்க சென்ற ஆண்டின் முதல் மாணவி தரும் டிப்ஸ்!

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. காலையில் அலாரம் வைத்து எழுந்து படிப்பது தொடங்கி, மாணவர்களின் வழக்கமான நடவடிக்கைகள் மாறத் தொடங்கியிருக்கும்
. நாட்கள் நெருங்க, நெருங்க பயம் தொற்றிக்கொள்வது இயல்புதான். ஆனால், அவசியமற்ற
அந்த பயத்தை ஒதுக்கித்தள்ளி, தேர்வை நம்பிக்கையுடன் எழுதுவதோடு, டாப் ஸ்கோர் எடுக்கவும் ஆலோசனைகள் தருகிறார் ஆர்த்தி.
ஆர்த்தி யார் என்று தெரியும்தானே?! சென்ற ஆண்டு 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்த மாணவி. தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் வருடம் மருத்துவம் படித்துவருகிறார்.
''தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு முதலில் வாழ்த்துகள். தேர்வுக்கு இன்னும் முழுதாக மூன்று மாதங்கள் இருக்கின்றன. அதனால் பதட்டமோ, பயமோ வேண்டாம். நான் சென்ற ஆண்டில் படித்தபோது கடைப்பிடித்த பழக்கங்கள் சிலவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.
* இப்போது, அதிகாலையில் எழுந்து படிப்பதோடு இரவில் அதிகநேரமும் படிக்கலாம். ஆனால் தேர்வு நெருங்கும்போது, (15 நாட்களுக்கு முன்பிருந்து) இரவு அதிகநேரம் கண் விழித்துப் படிக்காதீர்கள். அப்படிச் செய்தால், பகலில் உடல் சோர்வாகி, தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படலாம்.
* உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் தேர்வுக்கு தயாராவதில் முக்கியமான அம்சம். உங்களுக்கு எவ்வளவு பிடித்தமான உணவு என்றாலும், உடலுக்கு ஒவ்வாமை தரும் என்றால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.
* பொதுவாக, 'விடைகளை எழுதிப் பாருங்கள்' என யோசனை சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை எழுதிப் பார்க்கும் நேரத்தில், அதிக வினாக்களுக்கான விடைகளைப் படித்துவிடலாம் என்பேன். ஏனெனில், பல ரிவிஷன் தேர்வுகளில் பதில்களை எழுதிக்கொண்டிருப்போம். அதனால் அதையே திரும்பச் செய்ய வேண்டியதில்லை. வேண்டுமானால், ரிவிஷன் தேர்வு விடைத்தாளில் நாம் செய்த தவறுகளை கவனத்தில் கொண்டு, மீண்டும் அதேபோல வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
* ஆசிரியர்களின் உதவியைப் பெற எந்தத் தயக்கமும் கொள்ளாதீர்கள். சிலருக்கு எந்தப் பகுதியிலிருந்து படிக்கத் தொடங்குவது என்பதில் குழப்பம் இருக்கும். பாடத்தின் சில பகுதிகள் புரியாதவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு ஆசிரியரின் வழிகாட்டல் அவசியம்.
* பொதுத்தேர்வின்போது, இரண்டு பேனாக்கள் வைத்திருப்பது தொடங்கி, என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டிருப்பீர்களோ அதை ரிவிஷன் தேர்வுகளிலிருந்தே செய்யத் தொடங்குங்கள்.
* தேர்வு அறைக்குள் செல்லும் நிமிடம் வரை படிப்பதால் தேவையற்ற பதட்டமே வரும். அதற்கு முந்தைய 15 நிமிடங்களுக்கு புத்தகங்களை மூடி வைத்துவிட்டு, அமைதியான மனதுடன், தேர்வை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.
* ஒரு மதிப்பெண் வினாக்களைத் தனி கவனம் எடுத்து படியுங்கள். அதில் அதிக குழப்பமே, நான்கு ஆப்ஷனில் ஏதோ இரண்டு சரியான விடைகள் போல நமக்குத் தோன்றுவதுதான். அதனால் முதலில் அந்தக் கேள்வியை மட்டும் படியுங்கள். அதற்கான பதிலை உங்களின் நினைவிலிருந்து தேடி, கண்டுபிடியுங்கள். பிறகு, ஆப்ஷன்களைப் இப்படிச் செய்யும்போது குழப்பங்கள் பெருமளவு தீர்ந்துவிடும்.
* பெரிய வினாக்களை தேர்வு செய்யும்போது 'பிராப்ளம்' சால்வ் செய்யும் விதமான வினாக்களைத் தேர்தெடுக்கலாம். ஏனெனில் எல்லாம் எழுதி முடித்த பிறகு, சரியான முறையில் சால்வ் பண்ணியிருக்கிறோமா என்று நாமே செக் பண்ண முடியும்.
* சில வினாக்களுக்கான விடைகள் படிக்கும்போதே சிரமமாக இருக்கும். அவற்றை உங்கள் நண்பர்களோடு சேர்ந்து படிக்கலாம், விவாதிக்கலாம். அப்போது, அவர்கள் சொல்வது, அவற்றைப் புரிந்து படிப்பதற்கு உதவியாக இருக்கும்.
* தேர்வு நேரம் முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே நாம் அனைத்து விடைகளையும் எழுதி முடித்திருக்க வேண்டும். சென்ற ஆண்டு, இயற்பியல் தேர்வு எழுதி முடிக்க நேரம் போதவில்லை. அதனால் சற்று பதற்றமாகி விட்டேன். அதுபோல உங்களுக்கும் நேராதிருக்க, ரிவிஷன் தேர்விலேயே குறிப்பிட்ட நேரத்துக்குள் பரிட்சையை முடிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
* தேர்வு எழுதி முடித்தவுடனே, சிலர் விடைத்தாளை அழகாக்கும் விதத்தில் பார்டர் வரைய ஆரம்பித்துவிடுவார்கள். அது தவறில்லை. ஆனால் அதற்கு முன்பு, வினா எண்களைச் சரியாக எழுதியிருக்கிறோமா, விடைகளில் ஏதேனும் தவறுகள் இருக்கின்றனவா என்பதை செக் பண்ண வேண்டும். அவற்றைச் செய்தபின்னும் நேரம் இருந்தால், அதை அழகுபடுத்தச் செலவிடலாம்.
அப்பறம் நண்பர்களே... இந்த ஆலோசனைகள் பொதுவானவை. ஆனால் உங்களுடைய பலம், பலவீனம் இரண்டும் ஒருவருக்கு மட்டுமே நன்றாக தெரியும். அவர், நீங்கள்தான். அதனால் பலவீனங்களை எப்படி குறைப்பது, பலத்தை இன்னும் எப்படி அதிகப்படுத்துவது என்ற வழிகள் உங்களுக்கே தெரிந்திருக்கும்.

1 comment:

  1. Tamilnadu 11th Public Exam Result 2018 Announced on 30th May 2018 At 10:00 AM At https://tamilnadu11.rejinpaul.com.Stay Live Here To Download TN Board +1 Results

    ReplyDelete